ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், இராக் நாட்டில் ஆயுதமேந்தி போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளனரா என உளவுத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இராக் அரசுக்கு எதிராக அந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பு ஆயுதமேந்திப் போராடிவருகிறது. இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கும் வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டுகள் அணிந்த நிலையில், தமிழக இளைஞர்கள் சிலரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வார காலமாக உலவி வருகிறது.
இந்தப் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இது எடுக்கப்பட்டதாகவும், "தொண்டியிலிருந்து புறப்பட்டுள்ள சூறாவளி....!! தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஊர் தொண்டி. தொண்டி தமிழக முஸ்லிம் தலைவர்களை பெற்றெடுத்த ஊர். இப்பொழுது புதிதாக ஓர் சூறாவளி புறப்பட்டுள்ளது. புதிய சூறாவளி என்றாலும் உலகையே திரும்பி பார்க்க வைத்த அக்னி பிரவேசம்...." என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவாளர்கள் உள்ளனரா? என கடந்த இரண்டு நாட்களாக உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையின்போது, இராக்கில் உள்நாட்டு போர் நிகழ்ந்துவரும் வேளையில் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 46 இந்திய நர்ஸ்களை சிறு காயமும் இன்றி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர். இதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த டி.சர்ட்டை அணிந்ததாக அந்த இளைஞர்கள் கூறியதாக தெரிகிறது.