தமிழகம்

பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: அரசுக்கு டாக்டர் வி.சாந்தா கோரிக்கை

செய்திப்பிரிவு

பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புற்றுநோயில் இருந்து குணமானவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் விதுபாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புற்றுநோயில் இருந்து குணமானவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் டாக்டர் வி.சாந்தா பேசியதாவது:

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் 60-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 60 ஆண்டு களுக்கு முன்பு சரியான சிகிச்சை இல்லாததால், புற்றுநோயால் ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி யால் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளதால் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால், புற்று நோயைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம்.

பொதுவாக பெண்களில் 8-ல் ஒருவரும், ஆண்களில் 9-ல் ஒருவரும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆண்களைவிட, பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர் களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் தாக்குகிறது.

புகையிலை பொருட்களுக்கு அதிகமாக வரி விதித்தால் மட்டும் போதாது. புகையிலை பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தக் கூடாது. பொதுமக்களிடையே புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் சாந்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT