திருச்சி: திருச்சி அருகே விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் 14 வயது மாணவர் கொலப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் வட்டம் நல்லவன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் செல்வம் (14). 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் மாலை நல்லவன்னிபட்டியில் நண்பர்களுடன் வாலிபால் விளையாடினார். அப்போது, செல்வத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், அந்தச் சிறுவன் தாக்கியதில் செல்வத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. ஆனால், இதை வீட்டில் சொல்லாமல் உறங்கிய செல்வம், நேற்று மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்து செல்வம் இறந்து விட்டதாத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, செல்வத்தின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து புலிவலம் போலீஸார் வழக்குப் பதிந்து கொலை செய்ததாக 15 வயது சிறுவனை கைது செய்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.