தமிழகம்

திருச்செங்கோடு அருகே காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை

கி.பார்த்திபன்

நாமக்கல்: மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அம்மாணவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் கடந்த 3 நாட்களாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த கோகிலா மற்றும் சத்யா ஆகியோர் மூலம் சேமியா கிச்சடி, சாம்பார் சமைத்துள்ளனர். அந்த உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டு மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்பினர். அதில் சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதன்படி 8-ம் வகுப்பு பயிலும் வினித், சதீஸ், சந்தோஷ், ரோகித் சர்மா, யுவன், சதீஷ்குமார், மற்றொரு ரோகித், 7-ம் வகுப்பு மாணவர்கள் திலீப், தமிழ் இனியன், தர்மேஷ், சுஜித், சங்கு, 6-ம் வகுப்பு மாணவர்கள் வர்ஷன், குகப்பிரியன் ஆகிய 14 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம் உத்தரவின் பேரில் அம்மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

மேலும், மாணவர்களின் ரத்த மாதிரிகள், சாப்பிட்ட உணவு மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்கள் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் நேரில் பார்வையிட்டார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் உணவு சமைத்துக் கொடுத்து மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த இருந்த பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர் 195 பேருக்கு சமைக்க இரண்டு பேர் மட்டும் போதாது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமித்து சுகாதாரமான முறையில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலரிடம் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் உறுதியளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT