தமிழகம்

இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த வினோத் மனைவி பாக்கியம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், இதே பகுதியைச் சேர்ந்த சா.அந்தோணி, அ.ரூபின்ஸ்டன், ந.வில்பிரட், நே.விஜய், சே.ரமேஷ், இசக்கிமுத்து, முனியன் மற்றும் மாப்பிளையூரணி சுனாமி நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் ஆகிய 8 பேர் கடந்த 19-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களது படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இதையடுத்து மீனவர்களையும் அவர்களது படகையும் இலங்கை கல்பட்டி போலீஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், புத்தளம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கல்பட்டி போலீஸார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் 8 பேரும் நேற்று மாலை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் வரும் செப்.3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி அனுர இந்திரஜித் புத்தள ஜெயா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீஸார் அழைத்து வந்தபோது, மீனவர்களின் கையில் விலங்கு மாட்டி இருந்தனர்.

இதனிடையே அவர்களையும், படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT