தமிழகம்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம்; பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கு பின்னடைவு: காங்கிரஸ்

ஐஏஎன்எஸ்

மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே  திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, தமிழக அரசைப் பின்னால் இருந்து இயக்கியவர்களுக்குப் பின்னடைவாகும் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக, கருணாநிதியின் குடும்பத்தினர் சார்பில் இடம் ஒதுக்கத் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மெரினாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு நிலம் ஒதுக்க முடியாது.

அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் தெரிவித்தார்'' என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டார்.

இதை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் தமிழக அரசையும், பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர்

கூறியிருப்பதாவது:

‘‘சென்னை மெரினாவில் அண்ணை நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காமல் சதி செய்த டெல்லி தர்பாரை ஆள்பவர்களும், தமிழக அரசைப் பின்னால் இருந்து இயக்குபவர்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மிகப்பெரிய பின்னடைவாகும்.

மெரினாவில் மு.கருணாநிதிக்கு நினைவிடம் ஒதுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசு ஏன் மவுனமாக இருந்தன. திமுகவின் சட்டப் போராட்டத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அண்ணா நாம் வாழ்க’’ என சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT