மும்பையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், பள்ளிக்கூடம் கட்டுவதற்கும், நூலகம் அமைப்பதற்கும் திமுக தலைவர் கருணாநிதி நிதியுதவி அளித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது
திமுக தலைவர் மு. கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 10 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஆனால், சிகிச்சைக்கு ஏற்றார்போல், அவரின் உடல்உள்ளுறுப்புகள் ஒத்துழைக்காததால், நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி உயிர் பிரிந்தது.
கருணாநிதி மறைவுக்கு தேசியத் தலைவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், மும்பையில் திமுகவின் பொறுப்பாளர் ஆர் பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், 35 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி எங்களின் அழைப்பை ஏற்று மும்பைக்கு வந்திருந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், எங்களின் நடவடிக்கைகள், கட்சிப்பணிகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், எங்களின் தேவைகளை அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.
அப்போது நாங்கள் கருணாநிதியிடம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் பிள்ளைகள் படிப்பதற்குச் சரியான பள்ளிக்கூடம் இல்லை என்றோம், பள்ளிக்கூடம் கட்டவும் நிதியில்லை, நூலகம் கட்டவும் முடியவில்லை எனத் தெரிவித்தோம்.
இதைக் கேட்டகருணாநிதி உடனடியாக கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து பள்ளிக்கூடம் கட்டுவதற்குத் தேவையான நிதியையும், நூலகம் தொடங்குவதறக்கு தேவையான நடவடிக்கை செய்ய உத்தரவிட்டார். கருணாநிதியின் அப்போதைய நிதியுதவியாலும், ஆதரவினாலும் தமிழர்களின் குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பதற்குப் பள்ளிக்கூடம், இடம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டது. நூலகத்துக்குத்தேவையான தமிழ்,ஆங்கிலப்புத்தகங்களும் வாங்கப்பட்டன.
மும்பை வந்திருந்தபோது, கருணாநிதி ஆயிரக்கணக்கான தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். தாதர்-பார்சி ஜிம்கானா பகுதியிலும், வோர்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று கருணாநிதி பேசினார். யாராவது ஒருமுறை கருணாநிதியை நேரடியாகச் சந்தித்துவிட்டால், அவரின் ரசிகராகவும், தொண்டராகவும் மாறிவிடுவார்கள்.
ஆனால், கடந்த 1983-ம் ஆண்டுக்குப்பின் மும்பைக்குக் கருணாநிதி வரவே இல்லை. இனிமேலும் அவர் வரப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, மும்பையில் சியான்-கோலிவாடா, வோர்லி, தாதார் பகுதியில் மக்கள் திரண்டு வந்து அவரின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் தொண்டர்கள் விமானம், ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
சியான் கோலிவாடா தொகுதி பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ் செல்வன் இன்று இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். திமுக கொடியை ஏந்தி அப்பகுதியில் ஊர்வலமாக மக்கள் வந்தனர். அதன்பின் தமிழ் செல்வன் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி சமூக சீர்திருத்தவாதி, மூடப்பழக்கங்களை எதிர்த்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, தமிழ்த்தேசியத்தை உயர்த்திக் கொண்டாடியவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.