விண்ணப்பதாரர்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்ட மறை மலை நகர் வீட்டு மனைகளுக்கான விற்பனை குலுக்கலை இம்மாதத் துக்குள் நடத்தி முடிக்க சிஎம்டிஏ முடிவெடுத்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), மறைமலை நகர், மணலி பகுதிகளில் வீட்டு மனைகளையும், சாத்தாங்காடு மற்றும் கோயம்பேட்டில் உள்ள வர்த்தகரீதியான மனைகள் மற்றும் கடைகளையும் குலுக்கல் நடத்தி பொதுமக்களுக்கு குறைந்த விலை யில் விற்பனை செய்ய திட்டமிட்டது. கடந்த ஜனவரியில் மனுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் 78 ஆயிரம் பேர் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி மனைகளுக்காக விண்ணப்பித்தனர்.
குலுக்கல் நிறுத்தம்
இதற்கான குலுக்கல், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
மணலி பகுதியில் உள்ள வீட்டு மனைக்கான குலுக்கல் அமைதியான முறையில் நடந்தது. ஆனால், மறைமலை நகர் வீட்டு மனைகளுக்கான குலுக்கலின்போது 511551 என்ற எண்ணுக்கு குலுக்கல் மூலம் வீட்டுமனை அறிவிக்கப்பட, அது தவறான எண் என்று பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டதால், குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டது.
மறைமலை நகரில் விடுபட்டுப்போன மனைகளுக்கு மறு குலுக்கல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மீண்டும் மனைகளுக்கான குலுக்கலை ஜூலை மாதம் நடத்த சிஎம்டிஏ-வினர் திட்டமிட்டிருந்த நிலையில், மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் கடந்த ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள்.
விண்ணப்பித்தோர் குழப்பம்
அதைத் தொடர்ந்து, விபத்து பற்றிய விசாரணையிலும், சென்னையில் ஓராண்டுக்குள் திட்ட அனுமதி பெற்று கட்டி முடிக்கப்பட்ட 700 கட்டிடங்களை ஆய்வு செய்வதிலும் சிஎம்டிஏ அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதனால், மறைமலை நகர் வீட்டுமனை குலுக்கல் மேலும் தாமதமானது. பணம் கட்டி மனு வாங்கியவர்கள், குலுக்கல் நடக்குமா, நடக்காதா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி களைக் கேட்டபோது,” மவுலி வாக்கம் சம்பவத்தால் குலுக்கல் தாமதமாகிவிட்டது. மறைமலை நகர் வீட்டு மனைக் குலுக்கல் பிரச்சினையை விரைவில் சுமுகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் குலுக்கலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.