அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பொது சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மிகக் குறைந்த மாத சந்தாவான ரூ.70-க்கு உயர்தர கேபிள் டி.வி. சேவையை உள்ளூர் ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 அரசு பொது சேவை மையங்களை உள்ளூர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் ரூ.1 கோடியில் ஏற்படுத்தும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு மின் ஆளுமை விருதுகள் வழங்கப்படும். தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின் ஆளுமை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும், ‘தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வாரம்’ கடைபிடிக்கப்படும்.
அனைத்து அரசுத் துறைகளும் அரசு முகமைகளும் பயன்படுத்தும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில வழி கணினி பயன்பாட்டுக்கான, ‘தமிழ்நாடு மின் ஆளுமை தர நிர்ணயக் கையேடு’ வெளியிடப்படும். ‘தமிழ் மின் நிகண்டு’ உருவாக்கப்படும். இதில், ஒரே பொருள் கொண்ட பல்வேறு சொற்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றின் உச்சரிப்பு மற்றும் விளக்கங்கள் ஒரு தொகுப்பாக அமைக்கப்படும். தேவையான சொல்லை தட்டச்சு செய்தால், அச்சொல்லின் பொருள் கொண்ட பல சொற்கள் கணினித் திரையில் வெளிப்படும்.
மாணவர்கள் எளிதாக தமிழைக் கற்பதற்காக, ‘மின் கற்றலுக்கான இணையதளம்’, தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் அமைக்கப்படும். தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய தொடர் சொற்பொழிவு தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாதந்தோறும் நடத்தப்படும்.
இதில் சிறந்த அறிஞர்கள், வல்லுநர்கள் ஆற்றும் சொற்பொழிவை பதிவு செய்து, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் இணையத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.