ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக்கரைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதுபோல் நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கில் வரும் பொதுமக்கள் மூதாதையர்களுக்கு இங்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் காவிரியில் நீராடிய பின் தாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளை கழற்றி ஆற்றில் விட்டு விடுகின்றனர்.
“ஈரத் துணியை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாதாம். செய்த பாவங்கள் ஆற்றோடு போய் விடுமாம்” என்று கூறிவிட்டு காவிரியை விட்டு அகலும் பொதுமக்கள், நதி மாசுபடுவதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. இதனால் அம்மா மண்டபம் காவிரிக்கரையில் மட்டும் தினமும் 100 கிலோ வரை பழைய துணிகள் குவிகிறது. இதுவே அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஆயிரம் கிலோவாக அதிகரித்து விடுகிறது.
இப்படி குவியும் பழைய துணிகளை சேகரித்து எடைக்கு போடுவதை தொழிலாக சிலர் செய்து வருகின்றனர்.
இந்தாண்டு ஆடிப்பெருக்கில் கிடைத்த பழைய துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த கதிரேசனிடம் கேட்டபோது, “பொதுமக்கள் ஆற்றில் விட்ட துணிகளை காலை முதல் இரவு வரை சேகரித்துள்ளோம். எப்படியும் ஆயிரம் கிலோ தேறும். வெயிலில் நன்கு காய வைத்த பின்னர் 50 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கட்டி, பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரிகளிடம் எடைக்கு விற்று விடுவோம்.
ஒரு கிலோ ரூ.5 என்ற விலைக்கு எங்களிடம் துணிகளை வாங்கும் வியாபாரிகள் நல்ல வேட்டி, சேலைகளை அப்படியே சலவைக்குப் போட்டு புதிய துணி மாதிரி தயார் செய்துவிடுவர். இப்படி தயார் செய்யப்படும் துணிகள் பெரும்பாலும், ஏழை எளிய மக்கள் கூடும் இடங்கள், பிழைப்புக்காக வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வாழும் பகுதியில் கிடைத்த விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
கிழிந்த துணிகளை சேகரிக்க மாட்டோம். அதையெல்லாம் ஆற்றின் கரையில் ஒதுக்கி வைத்துவிடுவோம். அவற்றை மாநகராட்சியினர் குப்பையுடன் சேர்ந்து அள்ளிச் சென்று விடுவர்” என்றார்.
பழைய துணி சேகரிப்பதைத் தொழிலாகச் செய்யும் இவரைப் போன்றோரின் செயல் ஒரு வகையில் காவிரியை சுத்தம் செய்யும் பணி என்றே கூறலாம்.