‘‘இதுவரை சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக சேராதவர்களைக் கொண்டு 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்’’ என்று பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
நடப்பாண்டில் இதுவரை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக சேராத ஆதரவற்றோர், ஏழை கள், நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினரைக் கொண்டு 10 ஆயிரம் புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.35 லட்சம் ஒதுக்கப்படும்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், சுய உதவிக் குழு மகளிருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக அரியலூர், கரூர், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் தலா ரூ.4 லட்சத்தில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள் நிறுவப்படும்.
ஊரகப் பகுதிகளை பசுமையாக்கும் நோக்கில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளில் ரூ.7.92 கோடியில் 4.74 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கும் வகையில் சாலைகளின் இருபுறமும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும்பணி மேற் கொள்ளப்படும்.
500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பு உறுப் பினர்களிடையே ஒரு இணக்க மான நிலை ஏற்படவும், அவர்களது திறன்களை வெளிப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கா கவும், மகளிருக்கான கலாச்சாரப் போட்டிகளுடன் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளும் இணைத்து நடத்தப்படும். இதற்காக ரூ.1.60 கோடி செலவிடப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 முகாம்கள் வீதம் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் ரூ.20 லட்சத்தில் நடத்தப்படும். நான்கு ஆயிரம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் செலவில் சுய தொழில் செய்யவும், நிறுவனங்களில் பணிபுரியவும் தொழில்முனைவோர் பயிற்சிகள் ரூ.2 கோடியில் வழங்கப்படும்.
நடப்பாண்டில், 4,174 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் பெண் உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்பு உறுப்பினர் களுக்கு முதல் கட்டமாக “மக்கள் கற்றல் மையங்கள்” வாயிலாக தற்காப்புக் கலை பயிற்சி வழங் கப்படும். இதற்காக ரூ.4.50 கோடி ஒதுக்கப்படும்.
அரசு திட்டச் செயல்பாடுகளை திறம்பட கண்காணிக்கவும், திட்டத்தை தரமாகச் செயல்படுத்தவும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு உள்வட்ட உபயோகிப்பாளர் குழு வசதி (சியூசி) முறையில் அலைபேசி வசதி செய்யப்படும். 3,912 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக் கும், 2,602 ஒன்றிய மேற்பார்வை யாளர்களுக்கும் சந்தாதாரர் அடையாள தொகுதிக் கூறு அட்டைகள் (சிம் கார்டு) ரூ.1.29 கோடியில் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.