திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் தமிழக தலைவர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டில் நீண்ட காலம் மாநில முதல்வராகவும், தமிழக அரசியலின் முதுபெரும் தலைவராகவும் 50 ஆண்டுகளாக திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவு குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்துக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.