தமிழகம்

உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபச்சார விழா: எனது பணி டெல்லியில் இருந்தாலும் இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உருக்கம்

செய்திப்பிரிவு

நான் டெல்லிக்குச் சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் என உச்ச நீதிமன்ற நீதி பதியாக பதவியேற்க உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உருக்கமாக பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி பதவி உயர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி யாக பதவியேற்க உள்ளார். அவ ருக்கு பிரிவு உபச்சார விழா நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கத்தில் நடந்தது. விழாவில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச். அரவிந்த்பாண்டியன் பாராட்டிப் பேசும்போது, ‘‘உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்ற 16 மாத காலத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்து உச்ச நீதி மன்றத்துக்கு பதவி உயர்வில் செல்லும் முதல் பெண் நீதிபதி யும் நீங்கள்தான். பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளையும் வழங்கியுள்ளீர்கள்’’ என்றார்.

பின்னர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஏற்புரை வழங்கி பேசியதாவது:

ஒரு தலைமை நீதிபதியாக என்ன செய்ய வேண்டுமோ அந்த கடமையைத்தான் நானும் செய்தேன். எனது பணி சிறப்பாக அமைய உறுதுணை புரிந்த வழக்கறிஞர்கள், சக நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பணிக்காலத்தில் யாருக் கும் பயப்படாமல், துணிவோடும், நேர்மையோடும் பாரபட்சமின்றி தீர்ப்புகளை அளித்துள்ளேன். பாரம்பரியத்தோடும், கலாச்சாரத் தோடும் பின்னிப்பிணைந்த தமிழ கத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கொடி மேலும், மேலும் உயரத்தில் பறக்க அனைவரும் தங்களது ஒத்துழைப்பை சிறப்பாக வழங்க வேண்டும். பதவி உயர்வு என்றாலும் கனத்த இதயத்தோடுதான் இங்கிருந்து செல்கிறேன்.

நான் டெல்லிக்குச் சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில்தான் உள்ளது. தமிழக முதல்வர் எனது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்திச் சென்றார். அவரிடம் நான் நீதித் துறை பணிகளுக்கான நிதிஒதுக் கீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். அவரும் அதையேற்று ஒப்புதல் தெரிவித்தார்.

இவ்வாறு இந்திரா பானர்ஜி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்திவேல் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT