தமிழகம்

சென்னை மாநகர குப்பைகளை மீஞ்சூரில் கொட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகரில் சேகரமாகும் குப்பைகளை மீஞ்சூர் பகுதியில் கொட்டும் அரசின் முயற்சியை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீஞ்சூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சுற்றி உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சென்றுவரும் லாரிகள் சாலையில் சிந்தும் நிலக்கரிதுகள் உள்ளிட்டவைகளால், மீஞ்சூர் பகுதி மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் உள்ள வெள்ளைக் காரன் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்ட கடந்த ஆண்டு அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இரு வாரத்துக்கு முன் வருவாய்த்துறை அதிகாரி கள், வெள்ளைக்காரன் தோட்டத் தில் சம்பந்தப்பட்ட இடத்தில் நிலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குப்பை கிடங்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு கட்சியின் மீஞ்சூர் பகுதிச் செயலாளர் விநாயக மூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், அரூர் எம்எல்ஏ டில்லிபாபு, மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் சுப்ரமணி மற்றும் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT