மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு காலை 5.40 மணியளவில் சென்னை ராஜாஜி அரங்கிற்குக் கொண்டு வரப்பட்டது.
மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கம் வந்து விட்டது கலைஞர் கருணாநிதியின் உடல். 5 கி.மீ. இறுதிப் பயணம் 30 நிமிடங்கள் நீடித்தது.
இங்கு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும் வந்துள்ளனர். ராஜாஜி அரங்கில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தக் காத்திருக்கின்றனர்.
கருணாநிதி உடலின் மீது இந்திய தேசிய மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டது.
முன்னதாக சிஐடி காலனி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். சிஐடி காலனி இல்லத்தில் கருணாநிதியின் உடலைப் பார்ப்பதற்காக நின்ற தொண்டர்களின் வரிசை முடிவற்றதாக இருந்தது.
கருணாநிதி உடல் உள்ள கண்ணாடிப் பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது. ‘தலைவர் கலைஞர் மறைந்தார்’ என்று இன்றைய முரசொலியில் தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய் மாலை 6.10 மணியளவில் கருணாநிதி உயிர் பிரிந்தது.
மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே இவரது உடல் அடக்கம் செய்யப்படுமா என்பது காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வெளிவந்த பிறகு தெரியவரும்.