தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் தலைமையில் ஆலோசனை

செய்திப்பிரிவு

அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்துக்கு அன்னிய முதலீ டுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் பட்டது. அந்த மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, அடுத்தாண்டு ஜனவரி 23,24- ஆகிய தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையில், உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், இரா. துரைக் கண்ணு, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை செயலர் கு.ஞானதேசிகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT