திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழக மட்டுமின்றி, இந்திய அரசியலுக்கு பேரிழப்பு என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கலை, இலக்கியம் என தோன்றிய அனைத்துத் துறைகளிலும் பெருந்தொண்டாற்றிய பெருந்தலைவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழக மற்றும் இந்திய அரசியலுக்கு பேரிழப்பு. அனைத்து துறைகளிலும் பன்முகத்தன்மைக் கொண்டவரை தமிழன்னை மீண்டும் பெறுவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை யார் அறிவார்.
தமிழக, இந்திய அரசியலில் மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பிலும் என் சார்பிலும் இரங்கல்கள். ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் இரங்கல்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நண்பகல் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்ன வருகிறார். கருணாநிதியின் இறுதிச்சடங்கில் ராகுல்காந்தி கலந்துகொள்வார்” என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.