தமிழகம்

வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து திருடிய 4 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுவை திருபுவனை போலீஸார் மடுகரை நல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் வந்த விழுப்புரம் ரெங்கா ரெட்டிப்பாளையம் மூர்த்தி (23), அவரது தம்பி லட்சுமணன் (20), புதுவை நெட்டப்பாக்கம் சீனிவாசா நகர் சிலம்பரசன் (22) ஆகிய 3 பேரையும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த வாகனத்தை திருவாண்டார் கோயில் பகுதியில் திருடியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழக பகுதியான ராமரெட்டி குளம் மணிகண்டன் என்ற ஐய்யப்பன், ரெங்காரெட்டிப்பாளையம் எலி என்ற வேல்முருகன் ஆகியோருடன் இணைந்து பல திருட்டுகளை செய்துள்ளதாக போலீஸாரிடம் கூறினர். வங்கிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறி வைத்து பல திருட்டு சம்பவங்கள் மற்றும் திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

கடந்தாண்டு டிசம்பரில் மடுகரையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10.62 லட்சம் திருடியதாகவும், கடந்த பிப்ரவரி 18ம் தேதி நெட்டப்பாக்கத்தில் பாரதியார் கிராம கூட்டுறவு வங்கி உள்ளே நுழைந்து ஆக்ஸிஜன் மற்றும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறினர்.

இதையடுத்து, மூர்த்தி, லட்சுமணன், சிலம்பரசன், எலி என்ற வேல்முருகன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மடுகரையிலுள்ள இந்தியன்வங்கி ஏடிஎம் மையத்தில் திருடிய பணத்தில் மீதமிருந்த ரூ. 2.1 லட்சம், அதில் வாங்கிய மோட்டார் சைக்கிள், திருட்டு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

SCROLL FOR NEXT