சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்படுகிறது. இதற்காக ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆட்டோவில் நாய்களை அழைத்துச் செல்லும் நபர். 
தமிழகம்

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கட்டாயம்: உத்தரவை எதிர்த்து வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்கள் சாலைகளில் நடந்து செல்வோரை கடித்துக் குதறும் சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து வளர்ப்பு நாய்களை பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வாய் கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘ஒரு தனிநபருக்கு 4 வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை எடுத்து வளர்க்கும் எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும்.

உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவி்க்கப்பட்டுள்ளதால் தெருவில் அநாதையாக விடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் ஒரு லட்சம் வளர்ப்பு நாய்கள் இருப்பதாகவும், அதில் 31 ஆயிரம் நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, எஞ்சிய 69 ஆயிரம் நாய்களையும் நவ.24-க்குள் பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாநகராட்சி தரப்பில், தினமும் 5 ஆயிரம் நாய்களை பதிவு செய்ய முடியும் என்றும், உரிமம் கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பதிலளிக் கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT