சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாடினர்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநிலம் முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொய்களை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டுத் தலைமை மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த வெற்றி பிஹாரின் முன்னேற்றத்தையும், பொதுநலனையும் துரிதப்படுத்தும்.
தமிழகத்தை நோக்கி பயணம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜகவின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கி இருக்கும். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சாட்டியவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பதிலடி கிடைத்துள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் மீது பிஹார் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்கிறது. இண்டியா கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தற்போது இந்த தேர்தல் மூலம் நிரூபணமாகிஉள்ளது.
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: பிஹார் வெற்றி தமிழகத்துக்கும் பல தகவல்களைத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். பாஜக
முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: அதிகாரமளித்தல், செழிப்பு, ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை இந்த வெற்றி முறியடித்துள்ளது. குறுகிய, பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலைவிட, முன்னேற்றம், நல்லாட்சி, தேசிய நலன் எப்போதும் மேலோங்கும். இதேபோல, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.