சென்னை: தமிழக அரசு சார்பில், ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், 74-வது வார்டு சுப்புராயன் தெருவில் சிஎம்டிஏ சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகக் கட்டிட பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஷியம் 2-வது தெருவில் மாநகராட்சி சார்பில், இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் கட்டிடப் பணி, சந்திரயோகி சமாதி சாலை சந்திப்பு, கிருஷ்ணதாஸ் சாலையில் சிஎம்டிஏ சார்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம் கட்டிடப் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, உடன் இருந்த மேயர் ஆர்.பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் முதலில் முதல்வர் படைப்பகம் திறக்கப்பட்டது. இது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் வர சிரமமாக உள்ளது. அதனால், முதல்வர் ஸ்டாலின் ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்போது, 3 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 27 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தாயகம் கவி எம்எல்ஏ, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.தர், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுசிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.