ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்க முடியாது என்றும் அன்புமணியிடம் தலைமை சென்ற பின்னர் தான் தேர்தலில் பாமக படுதோல்வியை சந்தித்தது எனவும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பாமக எம்எல்ஏ அருள் கூறியதாவது: பாமக தொடங்கியதில் இருந்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டோம். கடந்த 2006-ம் ஆண்டு வரையில் பாமக-வில் யார் தலையீடும் இல்லாததால் பலர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், மக்களவை உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாமக தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை 55 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 17 மக்களவை உறுப்பினர்கள், 5 அமைச்சர் பதவிகள் பெற்றதற்கு முழு முதற்காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் என்பதால் இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணி தலைமையில் போட்டியிட்ட போது தான் கட்சி அங்கீகாரத்தை இழந்தோம். பாமக தலைமை அன்புமணியிடம் சென்ற பின்னர் தான் தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது, பாமக-வின் மாம்பழ சின்னத்தையும், ஏ, பி படிவத்தில் கையொப்பமிடும் உரிமையும் தனக்கு தான் இருப்பதாக அன்புமணி கூறுகிறார். சின்னத்தையும், ஏ,பி படிவத்தையும் அன்புமணி உரிமை கொண்டாடுவது பாமக நிறுவனர் ராமதாஸ் உழைப்பை திருடுவதற்கு சமமானது. மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்புமணி குறிப்பிடும் தீயசக்தி, கைக்கூலிகள் யார் என்றால், வழக்கறிஞர் பாலு போன்ற நபர்கள் தான். இவர்கள் விலகினால் பாமக-வில் நிலவும் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்றார்.