தமிழகம்

அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் கோவி.செழியன்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “வெளி மாநிலத்தில் இருந்து வருகிற போலி வாக்காளர்கள் மூலம் திமுகவின் வெற்றியை திருடி விடலாம் என நினைக்கிற அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருநறையூரில் உள்ள மங்கள சனீஸ்வரன் கோயிலான ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பிஹார் தேர்தலில் எஸ்ஐஆரால் ஏற்பட்ட இடர்பாட்டால், தோல்வி முகத்தில் இருக்கக்கூடிய மத்திய பாஜக அரசு, இங்கு கள்ள வாக்கு, வாக்குகளை திருடி வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறது.

வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மை பட்டியல் இன மக்களை நீக்கிவிட்டால் பெருத்த ஆதரவு முதல்வருக்கு இருப்பதை தடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த சதி திட்டத்தை எஸ்ஐஆர் என்ற பேரில் தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக அரசு செய்கிறது.

அதை அடிமைத்தனமாக அதிமுக வரவேற்கிறது. இருந்தாலும் தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வருகிற போலி வாக்காளர்கள் மூலம் திமுகவின் வெற்றியை திருடி விடலாம் என நினைக்கிற அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நவ.12-ம் தேதி தனது எக்ஸ் வலைதளத்தில், தனியார் பல்கலைகழகத்தை தமிழக அரசு ஊக்குவிக்கிறது என கருத்தை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து தமிழக முதல்வர், பலமுறை உயர்கல்வித்துறையின் கல்வியாளர்களோடு கலந்து பேசி சட்டப்பேரவையில் அதற்கான முன்வடிவை ஏற்கெனவே நாங்கள் திரும்பப் பெற்று விட்டோம். இந்த செய்தி தெரிந்தும், திரும்பப் பெற வேண்டும் என்ற அந்த கோரிக்கை எந்த வகையில் நியாயமானது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்வார்கள்.

சமூக நீதியிலும், உயர்கல்வி மேம்பாட்டிலும், ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட திராவிட மாடல் அரசு எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது. திரும்பப் பெற்ற தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, திரும்பப் பெற்ற நிலையில்தான் தொடரும் அதில் எந்த சமரசமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி ராமலிங்கம், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT