சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 29,000 தூய்மைப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
550 இடங்களில் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்துக்கான விரிவான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்கிடையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா ஆகியோர் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் மாநகராட்சி மேயர் பிரியா கூறியது: சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிடங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதேபோல, சமுதாய நலக்கூடங்களை மேம்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி துறைமுகம் பகுதியில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. வரும் டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சமுதாய நலக்கூடப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இதுதவிர, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், ரூ.180 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமுதாய நலக்கூடங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதில், வட சென்னை பகுதிகளில் 11 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். முன்பெல்லாம் தூய்மைப் பணியாளர்கள் உணவு சாப்பிடாமல் 6 மணி நேரம் பணியில் ஈடுபடும் சூழல் இருந்தது.
அவர்களுக்காக தனித்துவமாக இந்த திட்டத்தை முதல்வர் கொண்டுவர உள்ளார். விக்டோரியா அரங்கம் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். ஏற்கெனவே பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.