கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜராக வந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் | கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த இருவர் தனித்தனியாக ஆஜராகினர். 
தமிழகம்

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அக்.31 மற்றும் நவ.1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர்.

வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்கள், தவெக பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர், வெளி மாவட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நவ.2ம் தேதி காமராஜபுரத்தில் ராம்குமார் என்பவரை தேடிச் சென்ற சிபிஐ குழு, அவர் இல்லாததால் 3 பேர் கொண்ட குழு ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்ற சிபிஐ விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்களைக் கேட்டு சம்மன் வழங்கினர்.

இதையடுத்து நவ.8 மற்றும் நவ.9-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு, தவெக சென்னை பனையூர் அலுவலக உதவியாளர் குரு சரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.

முன்னதாக நவ.4, 5-ம் தேதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ.6-ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் க.பரமத்தியில் செயல்படும் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 3 பேர் விசாரணைக்கு நேற்று ஆஜராகினர்.

இந்நிலையில் 6-வது நாளாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (நவ.11ம் தேதி) தவெக ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் 2 பேர் ஒரே காரில் வந்து விசாரணைக்கு ஆஜராகினர். மேலும் கூட்ட நெரிசலில் காயமடைந்த ஆண்டாங்கோவில் முரளி கிருஷ்ணன், வடிவேல் நகர் முகமது நபி, வெள்ளியணை மகாலிங்கம் ஆகிய 3 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

SCROLL FOR NEXT