தூத்துக்குடி: “வரும் 2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோவாக இருக்கப் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று (நவ.7) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 படிவங்கள் பெற்று வழங்கலாம் என அறுவுறுத்தப் பட்டுள்ளதாக தெரிகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, வீடு வீடாக சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரங்கள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும். அதற்கு ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கூறியது: ”தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று செய்து வருகின்றனர். இப்பணியை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கண்காணித்து வருகின்றனர். அதிமுக சார்பிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப் பட்டு இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகார துஷ்பிரயோகம்: இந்த சீர்திருத்த பணி தேவையில்லை என்ற கருத்தை ஒருபக்கம் வைத்திருந்தாலும் திமுகவினரும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சில இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி படிவங்களை வாங்கி நாங்கள் தான் வீடுகள் தோறும் கொடுப்போம் என்ற நிலையில் செயல்பட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி தொகுதி லிங்கப்பட்டி ஊராட்சியில் திமுக ஒன்றிய செயலாளர் வாக்காளர் படிவங்களை வீடுகள்தோறும் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலை ஏற்படக்கூடாது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தான் படிவங்களை வாக்காளர் இல்லங்களில் வழங்க வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களையும் அவர்கள் மூலம் தான் திரும்ப பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணி நியாயமாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட நிர்வாகத்தை மீறி ஏதேனும் தவறு நடந்தால் மாநில தேர்தல் அலுவலர், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து அதனை தடுத்து நிறுத்துவோம்.
எஸ்ஐஆர் தான் ஹீரோ: எங்களை பொறுத்தவரை தகுதி உள்ளவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். தகுதி இல்லாதவர்கள் இடம்பெறக் கூடாது. எஸ்ஐஆர் என்ற வாக்காளர் சீர்திருத்த பணியில் கவனம் செலுத்த கட்சி பொதுச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த எஸ்ஐஆர் தான் 2026 தேர்தலில் ஹீரோவாக இருக்கும். எனவே, அதில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதால்தான் அதிமுக எஸ்ஐஆர் நடவடிக்கையை ஆதரிக்கிறது. தமிழகத்தில் போலி வாக்காளர்கள் தொகுதிக்கு 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால்தான் எஸ்ஐஆர் என்றாலே திமுகவுக்கு பயம், நடுக்கம் ஏற்படுகிறது. மடியில் பயம் இருப்பதால் தான் அவர்களுக்கு பயம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் பயமும் இல்லை. இந்த எஸ்ஐஆர் சிறப்பாக நடைபெற்று தகுதியான வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்கும் போது அதிமுக தான் நிச்சயம் வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராக வருவார்.
தமிழகத்துக்கு தலைக்குனிவு: கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பாலியல் வன்முறை நடைபெறாத நாளே இல்லை. கோவை சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்குகின்ற மிக கொடூரமான சம்பவம். இந்தியாவில் எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் குரல் கொடுக்கும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, கோவை சம்பவம் குறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. இந்த சம்பவம் தமிழகத்துக்கே ஏற்பட்ட தலைகுனிவு.
அராஜக, அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு திமுக ஆட்சியில் துணிச்சல் வந்துள்ளது. சட்டம் - ஒழுங்கை முதல்வரும், திமுக அரசும் சரியாக பராமரிக்காத காரணத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நாள்தோறும் நடக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதுபோல அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என்பது நாடறிந்த விஷயம். அதிமுக பலமாக இருக்கிறது. 2 கோடி தொண்டர்களை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். களைகள் எடுக்கப்படும்போது பயிர்கள் நன்று செழித்து வளரும் என்பதுதான் இயற்கை நியதி. அந்த நியதி அதிமுகவுக்கும் பொருந்தும்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.