தருமபுரி மாவட்டத்தில் நடைபயணம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி நேற்று சென்னை செல்ல சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 100 நாள் நடைபயண பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், 108 நாட்களாக நடைபயணம் நடந்துள்ளது. இதில், செல்லும் இடமெல்லாம் திமுக அரசுக்கு எதிரான அலை வீசி வருகிறது. பெண்கள், விவசாயிகள் மத்தியில் திமுக அரசுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் பேரலையாக மாறும்.
திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக உள்ளது. திமுக அரசு மீது தினம் ஒரு குற்றச்சாட்டு வெளிவருகிறது. தென் மாவட்டங்களில் தொடரும் கனிமவள கொள்ளைக்கு ஒரு ‘காட் ஃபாதர்’ உள்ளார். தேர்தல் நேரத்தில் அனைத்து ‘காட் ஃபாதர்கள்’ குறித்தும் வெளியிடுவோம், என்றார். பாமகவில் இரு அணிகளிடையே நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘ எல்லாம் உங்களால் தான்’ என்று கோபமாகக் கூறியபடி விமான நிலையத்துக்குள் அன்புமணி சென்றார்.