சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளில் பார் உரிமையாளர்கள் தாங்கள் விற்பனை செய்வது புகையிலை அல்லது நிக்கோடின் சேர்க்காத மூலிகை ஹூக்கா என்பதை நிரூபிக்க முடிந்தால், அவர்கள் தொடர்ந்து அவற்றை வழங்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளன. அதேபோல், மூலிகை ஹூக்காவைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஒபி) உருவாக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகையிலை, நிக்கோடின் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் மூலிகை ஹூக்காவுடன் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆயிரக்கணக்கான விற்பனை நிலையங்களைத் கண்காணிப்பது கடினம். மூலிகை ஹுக்காவுக்கான எஸ்ஒபி வகுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தமிழகத்தில் புகையிலை தடையின் வீரியத்தை குறைக்கும்.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மூலம் அனைத்து ஹுக்கா பார்களையும் தமிழக அரசு தடை செய்திருக்கும் நிலையில், மூலிகை மற்றும் புகையிலை ஹுக்காவுக்கு இடையில் பெறும் வேறுபாடு உள்ளது என்பது ஏற்கத்தக்கது அல்ல. இரண்டும் புகைபிடிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவித்து நிக்கோடின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அனைத்து வகையான ஹூக்கா தடையை தொடர்வதை தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.