தமிழகம்

காத்திருந்து காரியம் சாதித்த கதிர் ஆனந்த்! - மகனுக்கு மகுடம் சூட்டிய துரைமுருகன்

வ.செந்தில்குமார்

வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த ஏ.பி.நந்தகுமாரின் அதிகாரத்தை பாதியாக்கி அதை அமைச்சர் துரை முருகனின் புதல்வர் கதிர் ஆனந்துக்கு கொஞ்சம் பிரித்துக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. வேலூர் திமுகவினர் இந்தப் பாகப் பிரிவினையால் கொஞ்சம் ஷாக்காகித்தான் கிடக்கிறார்கள்.

இது குறித்து வேலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “தலைவரிடமும் சின்னவரிடமும் நல்ல புரிதலுடன் இருந்த ஏ.பி.நந்தகுமாருக்கு பொதுச்செயலாளரின் (துரைமுருகன்) மகன் கதிர் ஆனந்துடன் ஒத்துப்போகவில்லை. தனது மகனை எப்படியும் மாவட்டச் செயலாளராக்கி விட வேண்டும் என்பது பொதுச்செயலாளரின் நெடுநாள் ஆசை. அதற்கு தடையாக இருந்தவர் ஏ.பி.நந்தகுமார்.

இந்த நிலையில் அண்மையில் வேலூரில் உதயநிதி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிக்கு பந்தல், சேர், லைட் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய நந்தகுமாரிடம் நிதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘நான் மட்டும் தான் செலவு செய்யணுமா... எம்.பி கிட்டயும் கேட்டு வாங்குங்க’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

மாவட்ட வரும்படிகளை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்ளும் போது செலவு மட்டும் நான் பண்ணணுமா’? என்று அவர் ஆதங்கத்தில் சொன்னதை அப்படியே பொதுச்செயலாளருக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அதையடுத்து, தம்பி நிகழ்ச்சிக்கு நந்தகுமார் செலவு பண்ண மாட்டேங்கிறார் என்ற தகவல் தலைவர் வரைக்கும் பாஸ் ஆகிருச்சு.

இதையடுத்து, வேலூர் மாவட்டம் அரியூரில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும் போதே நந்தகுமாரிடம் போனில் பேசிய தலைவர், மாவட்டப் பிரிவினை விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘உனக்கு 3 தொகுதியும், கதிருக்கு 2 தொகுதியும் பிரித்துக் கொடுக்கிறேன். வழக்கம் போல கட்சி பணியை தொய்வின்றி கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான நந்தகுமார், ‘சரிங்க தலைவரே’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.

சற்று நேரத்தில், அதே மேடையில் இருந்த கதிர் ஆனந்தையும் போனில் அழைத்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் தலைவர். தனியாகப் போய் பேசிவிட்டு வந்த கதிர் ஆனந்த், உற்சாகத்துடன் திரும்பி வந்து, ‘பொறுப்புக் கொடுத்திருக்காங்க’ என தனக்குப் பக்கத்தில் இருந்த வேலூர் எம்எல்ஏ-விடம் சொல்லி இருக்கிறார்” என்றனர்.

வேலூர் மத்திய மாவட்ட திமுக இப்போது வேலூர் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டத்துக்கு கதிர் ஆனந்தும், தெற்கு மாவட்டத்துக்கு நந்தகுமாரும் செயலாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன் தக்க சமயம் பார்த்து தனது மகனை மாவட்டச் செயலாளர் பதவியில் அமர்த்தி இருப்பதை அவரது ஆதரவாளர்கள் பிறவிப் பயனாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT