தமிழகம்

Tamil Nadu SIR | திமுக வாதம் அர்த்தமற்றது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழினி

சென்னை: “தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்ட விதிகளின்படி வாக்காளர்களுக்கு படிவத்தை பிஎல்ஓ-க்கள்தான் (வாக்குச்சாவடி அலுவலர்) வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இது மாதிரி நடப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும்.

தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. எஸ்ஐஆர் மூலம் சிறுபான்மையின வாக்குகளை நீக்கிவிடுவார்கள் என்பது தவறான கருத்து. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரிகளை மிரட்டி படிவங்களை திமுகவினர் பறிக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

தவெக பொதுக்குழு தீர்மானம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "தலைவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது தங்கள் கட்சிக்கென தனித்தன்மை வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். தவெக தலைமையில்தான் கூட்டணி, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அவர்கள் பேசியிருக்கலாம். அது அவர்களின் கருத்து,. ஆனால் யார் முதல்வர் என மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் சொல்கிறோம், அதிமுக தலைமையில்தான் கூட்டணி, இது எங்கள் கருத்து” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT