சேலம் / சென்னை: சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த காரை வழிமறித்து கும்பல் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர். அன்புமணியின் தூண்டுதலின்பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளதாக அருள் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவான அருள், ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இதனால், அன்புமணியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அருள் ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாமக ஒன்றியச் செயலாளர் வடுகநத்தம்பட்டி சத்யராஜின் தந்தை தர்மராஜ் உயிரிழந்த நிலையில், துக்கம் விசாரிப்பதற்காக அருள் எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார். பின்னர், 5-க்கும் மேற்பட்ட கார்களில் அவர்கள் சேலம் புறப்பட்டனர். வாழப்பாடி அருகே சென்றபோது, திடீரென ஒரு கும்பல் கார்கள் மீது கற்களை வீசித் தாக்கியது. கார்களை நிறுத்தியதும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கார் கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் உடைத்தனர்.
அப்போது அருள் ஆதரவாளர்களுக்கும், அந்த கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து போலீஸார் வந்தவுடன், அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதில், அருளின் ஆதரவாளர்களான பாமக மாவட்டச் செயலாளர் நடராஜ், தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றியச் செயலாளர் ஆனந்த், இளைஞரணி நிர்வாகிகள் விஜி, மணிகண்டன், ஸ்ரீரங்கம் ஆகியோர் பலத்த காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் அருள் புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்புமணியின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 15 பேர் எங்களைத் தாக்கினர்.
தொண்டர்கள் என்னைச் சுற்றி நின்று பாதுகாத்தனர். `உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம்' என அக்கும்பல் மிரட்டியது. இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி தூண்டுதல் பேரில்தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. முதல் குற்றவாளி அன்புமணிதான். இவ்வாறு அவர் கூறினார்.
ராமதாஸ் கண்டனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது: பாமக எம்எல்ஏ அருள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல், ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
சில நாட்களாக சேலம், அரியலூர், தருமபுரி, தஞ்சை மாவட்டங்களில் அன்புமணி பலரைத் தூண்டிவிட்டு, என்னையும், முக்கியப் பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி, வன்முறையைத் தூண்டிவிட்டு மோதலை உருவாக்கி வருகிறார். எனவே, அன்புமணியின் கும்பலை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று காவல் துறையை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அருளை கைது செய்ய வேண்டும்: பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிட்ட அறிக்கையில், “பாமகவில் இருந்து அருள் நீக்கப்பட்டதிலிருந்தே பாமகவினர் மீது தாக்குதல் நடத்துவது, பொது அமைதியை குலைப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்றவற்றில் அருள் ஈடுபட்டு வருகிறார். எனவே, சேலம் அருளையும், அவரது கூட்டாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முறையீடு: இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆஜரான எம்எல்ஏ அருள் தரப்பு வழக்கறிஞர்கள், “கொலை வெறித் தாக்குதலுக்கு காரணமான அன்புமணி மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று முறையீடு செய்தனர். அதையடுத்து, “இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” என்று நீதிபதி தெரிவித்தார்.