தமிழகம்

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

வி.சீனிவாசன்

சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது.

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள், இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி பாமக எம்எல்ஏ அருள் தொலைபேசி எண்ணுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுவதும், ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடுவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, ஏற்கனவே பாமக எம்எல்ஏ அருள், காவல் நிலையத்தில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனுவை அளித்துள்ளார் .

இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள கட்சியின் நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, பாமக எம்எல்ஏ அருள் கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அருள் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அருள் உடன் சென்ற ஆதரவாளர்களும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள்ளே அமர்ந்திருந்த அருளை கட்சி நிர்வாகிகள் பாதுகாத்தனர். பின், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஒட்டம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் எஸ்பி அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்தார்.

SCROLL FOR NEXT