ஊத்துக்கோட்டை: பூண்டி ஏரியில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கிய சென்னை இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், பூண்டி ஏரியிலிருந்து, கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரியையும், அதில் இருந்து ஓசையுடன் வெளியேறும் உபரிநீரையும் பொதுமக்கள் குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யாசின் (22), தன் நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன் தினம் மாலை பூண்டி ஏரிக்கு வந்தார்.
அப்போது, யாசின் தன் நண்பர்களுடன் சிறிய மீன் பிடி படகில் சென்று, ஏரியை ரசித்து மகிழ்ந்தார். யாசின் செல்ஃபி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக படகில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனையறிந்த யாசின் நண்பர்கள், அவரை மீட்க முயன்றும் பலனில்லை.
இதுகுறித்து, தகவல் அறிந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நேற்று முன் தினம் சுமார் 3 மணி நேரம் தேடியும், யாசினை மீட்க முடியவில்லை. அதே நேரத்தில் இருள் சூழ்ந்தால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை மீண்டும் யாசினை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்பணி நேற்று மாலை வரை தொடர்ந்தும் யாசின் கிடைக்கவில்லை. ஆகவே, யாசினை தேடும் பணி இன்றும் தொடரும் என, தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பென்னலூர்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.