சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஏற்கெனவேவெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், வீடு வீடாக அலுவலர்கள் வந்து விண்ணப்ப படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெறும் பணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று முழுவீச்சில் தொடங்குகிறது.
இன்று முதல் டிச.4-ம் தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாளர்கள். அப்போது, அனைத்து வாக்காளர்களுக்கும் பகுதியளவு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை வழங்குவார்கள். அந்த படிவத்தை வாக்காளர்கள் நிரப்ப வேண்டும். நிரப்புவதில் சிரமம் இருந்தால், நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.
வீட்டுக்கு 3 முறை வருவார்கள்: நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அலுவலர் வழங்குவார். இவ்வாறாக ஒரு வீட்டுக்கு வாக்குச்சாவடிநிலை அலுவலர் 3 முறை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளையும் நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால், சமீபத்திய புகைப்படத்தை படிவத்தில் ஒட்டலாம். இந்த கணக்கெடுப்பின்போது வாக்காளரிடம் இருந்து எந்த ஒரு ஆவணமும் பெறப்படாது.
இணையதளம், செயலியிலும் வசதிமேலும், கணக்கெடுப்பு படிவத்தை இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். பகுதியளவு நிரப்பப்பட்ட படிவத்தை ‘ECINET’ என்ற செயலிமூலம் பதிவேற்ற முடியும். இல்லாவிட்டால் ‘voters.eci.gov.in’ என்ற இணையதளத்தில் கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அதன்பின் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
வீடு வீடாக வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 2002-05-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்தான் இருக்கும். அதன் அடிப்படையில்தான் கணக்கெடுப்பு நடைபெறும். எந்த வீடுகளில் உள்ள வாக்காளர்கள் 2002, 2005 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களோ, அவர்களது வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அந்த வீடுகளில் இருப்பவர்களிடம் வாக்காளர்பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, படிவத்தை வழங்கி பூர்த்தி செய்து பெறுவார்கள். அங்கு 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் படிவங்கள் வழங்கப்படும். 2002 அல்லது 2005 பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம். உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம்.
இதன்மூலம் வரும் டிச.9-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய முடியும். முகவரி மாற்றம் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது. முகவரி மாறியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இதுவரை சேர்க்காதவர்கள் அதற்கான ஆவணங்களுடன் டிச.9-ம் தேதி முதல் 2026 ஜன.8-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை சேர்த்து வழங்கி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதன்பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேக் சிங் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் அக்டோபர் 27-ம் தேதியிட்ட அறிக்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யாவிட்டால், லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்க நேரிட்டு, அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையாக உள்ள நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்துவது நமது ஜனநாயக நாட்டில் கேள்விக்குள்ளாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான காரணங்களை தேர்தல் ஆணையம் அதன் அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் அக்டோபர் 27-ம் தேதியிட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணி சிறப்பாக நடக்கும் என ஆணையம் உறுதி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்), சட்டத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடைபெறும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. தியாகராய நகர், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியல் குளறு படிகளை சரிசெய்து, தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தியாகராய நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், தாம்பரம் அதிமுக வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்குகள்நேற்று விசாரணைக்கு வந்தன.தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நவ.4 (இன்று) தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்தனியாக படிவம் வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்த்து, அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படும். அதில் ஆட்சேபம் இருந்தால் கருத்தில் கொள்ளப்பட்டு, அதன்பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஏதேனும் பிழை இருந்தால், முழுமையாக களையப்பட்டு, யாரும் எதிர்பாராததைவிட ஒருபடி மேலே சென்று சட்டத்துக்கு உட்பட்டு இப்பணி சிறப்பாக நடத்தப்படும்’’ என்று உறுதி அளி்த்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நவ.13-ம் தேதி பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.