சென்னை: வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அதிகாலையில், மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இரண்டு விசைப்படகுகளில் தலா 10 பேரும், ஒரு விசைப்படகில் 11 பேரும், நாட்டுப் படகில் 4 பேரும் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் 31 பேரும் நாகை மாவட்டத்தையும் நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகுடன் 35 மீனவர்களையும் கைது செய்தனர்.
படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.