தமிழகம்

மாங்கனி பார்ட்டி தலைவரின் ‘அர்ச்சனை’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மாங்கனி பார்ட்டியில் நிறுவனருக்கும் தலைவருக்கும் சிந்துபாத் கதையாக மல்லுக்கட்டு தொடரும் நிலையில், அண்மையில் நிறுவனரும் தலைவரும் மாங்கனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதில், நிறுவனருக்கு நெருக்கமான ‘கவுரவ’ப் புள்ளியின் தொகுதிக்கு தலைவர் பயணம் போனபோது அவரை வரவேற்க அவ்வளவாய் ‘சொந்தங்கள்’ கூடவில்லையாம். அந்தத் தொகுதியின் கிராமப் பகுதிகளில் இன்னும் ‘கவுரவ’ப் புள்ளிக்குத்தான் செல்வாக்காம்.

அவரை மீறி தன்னை வரவேற்க ’சொந்தங்கள்’ பெரிதாக அணி திரளவில்லை என்றதும் நம்மகட்சி செல்வாக்காய் இருக்கும் இந்தத் தொகுதியில் இவ்வளவுதானா நமக்கு ரெஸ்பான்ஸ் என்று வாடிப்போன தலைவர், அந்தத் தொகுதியில் எதற்கெடுத்தாலும் தனக்கு ஜே போடும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ‘காது குளிர’ காய்ச்சி எடுத்துவிட்டாராம்.

இதனால் தலைவரை தாஜா செய்ய அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நின்ற நிர்வாகிகள், கடைசியில் அங்கும் இங்கும் கொஞ்சம் ‘பச்சையப்பனை’ திரட்டி நிறைவாக தலைவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ’அலைகடலென’ மக்களைத் திரட்டி உட்கார வைத்து தங்களுக்கு ‘எக்ஸ்ட்ரா அர்ச்சனைகள்’ ஏதும் நடக்காமல் எஸ்கேப் ஆனார்களாம்.

SCROLL FOR NEXT