சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர்கள், தொடர்புடைய வாக்குச்சாவடிகளில், சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை உறுதி செய்யும் பணி மட்டும் வழங்கப்படும். ஆனால் அதிமுக சார்பில், கூடுதலாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாக கிளை உறுப்பினர்களாக தலா 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாக கிளையிலும் 3 பெண்கள், தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 2026 தேர்தலுக்காக அதிமுக சார்பில் ஏராளமான பிரச்சார முன்னெடுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அவற்றை வீடு வீடாக கொண்டு சேர்க்கும் பணி, பாக கிளை முகவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாக கிளை முகவர்களை ஒருங்கிணைக்கும் பணியை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொள்கிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகங்களை எந்த வடிவத்தில் எப்படி வீடு வீடாக கொண்டு சேர்ப்பது என்கிற பயிற்சியை தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள் பாக கிளை முகவர்களுக்கு வழங்க உள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாக முகவர்களை ஒருங்கிணைப்பது எப்படி, அவர்களிடம் எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அதிமுகவின் பிரச்சாரத்தை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது எப்படி என்று முதலில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் பயிற்சியை பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பாக கிளை முகவர்களை நியமிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். இதில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கட்சி வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் நடத்தியுள்ள போராட்டங்கள், கட்சியின் செல்வாக்கு, சாதக, பாதகங்கள், வெற்றி பெற வாய்ப்புள்ள, செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் தொடர்பாக பழனிசாமி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, "தங்களுக்கான மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்காணிக்க வேண்டும். அப்பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். இதில் பூத் கமிட்டி நிர்வாகிகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இவர்களை ஒருங்கிணைக்க தகவல் தொழில்நுட்ப அணியினர் உதவுவார்கள்" என்றார்.
இவ்விரு கூட்டங்களிலும் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.