நான்கு ஆண்டுகளாக ஆசையாக சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணம் ரூ.8 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்த சிறுமிக்குப் பாராட்டு குவிகிறது. அவருக்கு புது சைக்கிள் வழங்க ஹீரோ சைக்கிள் நிறுவனம் முன் வந்துள்ளது.
விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவ சண்முகநாதன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 8 வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் அனுப்பிரியா என்ற மகள் உள்ளார். இவருக்கு சைக்கிள் ஓட்டவேண்டும் என்று கொள்ளை ஆசை. இதற்காக தந்தையிடம் கேட்டபோது அவர் மொத்தமாக சைக்கிள் வாங்கித் தரும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை அவ்வப்போது பணம் தருகிறேன் அதை சேமித்து வாங்கிக்கொள் என்று கூறிவிட்டார்.
பெற்றோரின் நிலையைக் கருதி சிறுமியும் அவர்கள் அவ்வப்போது கைச்செலவுக்கு அளிக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். இவ்வாறு நான்கு ஆண்டுகளாக அவ்வப்போது எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்று எடுத்து எண்ணி வருவார். வரும் அக்டோபர் 16-ம் தேதி அனுப்ரியாவுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்று எப்படியும் புது சைக்கிள் வாங்கி ஜாலியாக ஓட்டவேண்டும் என்ற கனவில் சிறுமி இருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் கடந்த ஜூன் முதல் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துவிட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கேரள மக்கள், வீடிழந்து உடைமைகளை இழந்து வாடும் செய்தி நாள்தோறும் செய்திகளில் வந்தவண்ணம் உள்ளது.
உதவும் எண்ணம் கொண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நாள்தோறும் தொலைக்காட்சிகளில் வரும் துயரக் காட்சிகளை சிறுமி பார்த்து துயரமடைந்தார். தானும் மற்றவர்களைப்போல் கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.
இதுபற்றி தந்தையிடம் கூற நாம இருக்கும் நிலையில் என்னம்மா உதவி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். நான் வேண்டுமானால் சைக்கிள் வாங்கவில்லை அப்பா, அந்தப்பணம் ரூ.8000 இருக்கிறது. அதை நிவாரணமாக அளித்துவிடலாம் என்று சிறுமி கூற தந்தை நெகிழ்ந்து போனார்..
இதையடுத்து உண்டியல்களில் இருந்த சுமார் எட்டாயிரம் ரூபாய் பணத்தை சிறுமி தனது தந்தையிடம் ஒப்படைத்தார். வங்கி வரைவோலை மூலம் சிவசண்முகநாதன் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பினார்.
இந்தத் தகவல் வெளியில் பரவ சிறுமியின் தயாள குணத்தைப் பார்த்த அனைவரும் நெகிழ்ந்து போயினர். தனது ஆசையைத் தள்ளிவைத்து அந்தப் பணத்தை அளித்த பிஞ்சு மனதை அனைவரும் பாராட்டினர்.
பாராட்டு மட்டுமல்ல அவரது செயலைப்பார்த்து நெகிழ்ந்துபோன பலரும் சிறுமிக்கு புது சைக்கிளே வாங்கித் தர முன் வந்தனர். இதனிடையே ஹீரோ சைக்கிள் நிறுவனம் அனுப்ரியாவின் சேவை மனப்பான்மையைப் பாராட்டி புத்தம் புதிய சைக்கிளை அளிக்க முன்வந்துள்ளது.
அனுப்ரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர் சௌந்தரராஜா, சிறுமியின் சேவை மனப்பான்மையைப் பாராட்டியுள்ளார். அவரது ட்விட்டில் “நம்ம ஊரு கர்ணன் வாரிசு ...! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று., விழுப்புரத்தில் 4 ஆண்டுகளாக தனக்கு சைக்கிள் வாங்க சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக வழங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி வள்ளல் தமிழச்சி அனுப்பிரியா... தங்கமே வாழ்க நீ என்றும் புகழோடு” என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று அனுப்ரியாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.