அரசியலை ஒரு சாக்கடை என்று பலரும் பொதுப்படையாகச் சொல்வார்கள். ஆனால், சாக்கடைப் பிரச்சினையை ஒழிப்பதற் காகவே மதுரையில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், ‘தமிழ்நாடு சாக்கடை ஒழிப்பு கட்சி’ என்ற கட்சியை தொடங்கி ‘மிரட்டி’ இருக்கிறார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 160 வாக்குகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு 1.060 வாக்குகளையும் பெற்று ‘சாதனை’ படைத்தவர் சங்கரபாண்டியன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு 235 வாக்குகளைத் தந்து ‘கவுரவ’ப்படுத்தினார்கள் 24-வது வார்டு மக்கள்.
இந்த நிலையில் தான் புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி அதை முறைப்படி பதிவும் செய்து இப்போது சமூக வலைதளங்கள் மூலமாக வைரல்(!) ஆக்கி வரும் சங்கரபாண்டியன், கட்சியில் உறுப்பினராகச் சேர மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லியே பெரும்பாலனவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். இதனால் பலபேர் தங்களது வாக்கைக்கூட செலுத்த முன்வருவதில்லை. எனது வார்டில் ஆண்டாண்டு காலமாக இருக்கும் சாக்கடைப் பிரச்சினையை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியவில்லை. மதுரை முழுக்கவே இது தீராத தலைவலியாக இருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே ‘தமிழ்நாடு சாக்கடை ஒழிப்பு கட்சி’யை தொடங்கி இருக்கிறேன். இதைப் பார்த்துவிட்டு பலரும் என்னை கேலியும் கிண்டலும் செய்கின்றனர். ஆனால், சாக்கடைப் பிரச்சினை சாதாரணப் பிரச்சினை தானே என்று கடந்து செல்லாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கட்சியை நான் தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம், சாக்கடைப் பிரச்சினை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்வேன்” என்றார்.