ஆளுநர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது வருத்தத்தில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு புதுச்சேரி பிராந்தியத்தின் காரைக்கால் திமுக அமைப்பாளர் நாஜிம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்புக்கு திமுக கூட்டணிக்குள் இருந்தே இப்போது எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளருமான சிவா, “ரங்கசாமி இண்டியா கூட்டணிக்கு வரவேண்டும் என்பது நாஜிமின் எண்ணமாக இருக்கலாம். நம்மோடு நட்பாக இருந்த ரங்கசாமி, பாஜகவிடம் மாட்டிக்கொண்டு இப்படி சின்னாபின்னமாகி வருகிறாரே என்ற ஆதங்கத்தில் நாஜிம் இப்படிச் சொல்லியிருக்கலாம்.
அவரைக் காப்பாற்றுவதற்காகவும் அப்படிப் பேசியிருக்கலாம்.ஆனால், ஜனநாயகத்தில் நட்பு வேறு, அரசியல் வேறு. எங்கள் அணிக்கு எதிரான கொள்கை உடையவர்களின் அணியில் ரங்கசாமி உள்ளார். நாங்கள் மதச்சார்பற்ற அணியில் இருக்கிறோம். அதற்கு எதிரான கொள்கை உடைய அணியில் உள்ள ஒருவருடன் ஒரு போதும் நாங்கள் பயணிக்க மாட்டோம்" என்றார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான வைத்திலிங்கம் எம்.பி-யோ, “ரங்கசாமியை இண்டியா கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் ஏதுமில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக பல தொகுதிகளில் ரங்கசாமியின் கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சலீமிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “இதுபோன்ற கருத்தே சரியான அரசியல் இல்லை" என்றார்.“இன்னும் 5 மாதங்களில் என்னவெல்லாம் நடக்கிறது என பார்ப்போம்” என்கிறார்கள் புதுச்சேரியின் அரசியல் பார்வையாளர்கள்.