சென்னை: பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். தவறினால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி தலைமையில் நடந்த நிகழ்வில் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் ஏ.நித்தியானந்தம், பல துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முதலில் மருத்துவமனையில் அனைவரும் பேரணியாகச் சென்று பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்தும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி பேசியதாவது: மூளை ரத்த ஓட்டத்தில் திடீரென ஏற்படும் தடையால் கை, கால் செயலிழப்பு மற்றும் பிற அறிகுறிகள் தோன்றுவதே பக்கவாதம் ஆகும். இது ரத்த அடைப்பாலோ வெடிப்பாலோ ஏற்படுகிறது.
திடீரென ஒருபுறமாக ஏற்படும் கை கால் பலவீனம், கை கால் மரத்துப்போகுதல், நடப்பதில் தள்ளாட்டம், பேச்சு குளறுதல், பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம், வாய் கோணலாகுதல், விழுங்குவதில் சிரமம் மற்றும் பார்வை மறைத்தல் போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து மிகுந்த நிலை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, போதைப் பொருட்களை உபயோகித்தல் ஆகியவை பக்கவாதம் வருவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
பக்கவாத அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் முதல் நான்கரை மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரத்தநாள அடைப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் ‘திராம்போலைசிஸ்’ எனும் சிகிச்சையின் மூலம் அந்த அடைப்பை கரைக்க முடியும். இதன் மூலம் கை, கால் செயலிழப்பு ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம். நான்கரை மணி நேரத்தை கடந்து வரும்போது, அந்நோயிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
இதனால், நம் வாழ்நாள் முழுவதும் நிரந்தர முடக்க நிலைக்குத் தள்ளப்படுவோம். நம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அரைமணி நேரம் மேற்கொண்டால், நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து, உப்பு மற்றும் சர்க்கரைச் சத்து அளவுகள் கட்டுக்குள் வரக்கூடும். அனைத்து ரத்த நாளங்களும் விரிவடையும். மனிதனுக்கு நல்ல உறக்கம் அவசியம். தினமும் 6-8 மணி நேரம் தூங்கும்போது மூளை நரம்புகள் அனைத்துக்கும் ஓய்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.