தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழா நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை திருக்கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, மாவட்ட ஆட்சியர் மா.பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழு தலைவர் து.செல்வம், அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், தமிழ் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 39 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறிநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செய்தனர்.