தமிழகம்

புதுச்சேரியில் புதிதாய் முளைக்கும் கட்சிகள்: ‘பி டீம்’ அரசியலில் பின்னி எடுக்கும் தலைவர்கள்!

செ.ஞானபிரகாஷ்

தேர்தல் சமயத்தில் புதிதாக கட்சிகள் முளைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடுமளவுக்கு புதுச்சேரியில் புதிய கட்சிகளின் வரவு இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன.

கடந்த 2011-ல், சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸை விட்டு விலகி,என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. அதேபோல் காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் கண்ணன் மூப்பனாரின் தமாகாவில் இணைந்து 6 எம்எல்ஏ-க்களை பெற்று அமைச்சரானார்.

அதன் பிறகு மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிய கண்ணன், அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியில் வந்து ‘புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்’ கட்சியைத்தொடங்கினார். இதேபோல் பாமகவில் இருந்துவெளியேறிய முன்னாள் எம்பி-யான ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தனிக்கட்சி தொடங்கி சாதித்தும் இருக்கிறார்கள் சறுக்கியும் இருக்கிறார்கள்.

இந்தச்சூழலில் தற்போதைய சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு அண்மையில் ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்தாலும், அண்மை ஆண்டுகளாக நடுநிலையாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார் நேரு.

இப்போது இவருக்கு ஆதரவாக முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் (முன்னாள் எம்எல்ஏ-வான இவர் இப்போது பாஜகவில் இருந்து விலகி தனிஅமைப்பை நடத்தி வருகிறார்), அதிமுகமுன்னாள் எம்எல்ஏ-வான அசனா, தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் பாமக எம்பி-யான ராமதாஸ் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர். மாநில அந்தஸ்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாங்கள் அனைவரும் ஓரணியாக செயல்பட இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆகியோரும் அரசியல் கட்சிகளைத் தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் இன்னும் சில கட்சிகளும் புதுச்சேரி அரசியலில் புதிதாக முளைக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய புதுச்சேரியின் அரசியல் பார்வையாளர்கள், "என்டிஏ கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்களின் ‘பி டீம்’ களாக புதிதாக சில கட்சிகளை உருவாக்குவதாகத் தெரிகிறது. இவர்களின் கணக்கு என்ன... இதனால் யாருக்கு பலன் கிடைக்கும்... இந்த அரசியல் சதுரங்கத்தில் யார் சக்சஸ் ஆகப் போகிறார்கள் என்பதை எல்லாம் போகப் போகத்தான் கணிக்க முடியும்" என்கின்றனர்.

SCROLL FOR NEXT