தமிழகம்

அதிரடியாய் நீக்கிய இபிஎஸ்... அடுத்து என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

எஸ்.கோவிந்தராஜ்

எம்ஜிஆரால் 25 வயதில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு எம்எல்ஏ ஆக்கப்பட்ட செங்கோட்டையன், இதுவரை 9 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். செங்கோட்டையனைத் தெரியாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அறியப்பட்டவர் கே.ஏ.எஸ்.

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு அமைந்த முதல்வர் வாய்ப்பை நழுவவிட்டு, இபிஎஸ்ஸுக்கு விட்டுக் கொடுத்தவர் அப்படிப்பட்ட செங்கோட்டையன், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக இபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுத்துவந்தார்.

அது நடக்காத நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் நேற்று முன்தினம் தேவர் ஜெயந்தியில் ஒன்றாக பங்கேற்றார். இதற்கு பதிலடியாக செங்கோட்டையனை ஒரேயடியாய் கட்சியைவிட்டு நீக்கி தனது அதிகாரத்தை நிலை நிறுத்தி இருக்கிறார் இபிஎஸ்.

இந்த நிலையில், செங்கோட்டையனின் அரசியல் எதிர்காலம் குறித்தும், அவரது அடுத்த ‘மூவ்’ குறித்தும் ஈரோட்டில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நம்மிடம் பேசுகையில், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என கேஏஎஸ் எழுப்பிய குரலுக்கு, வெளிப்படையாக யாரும் ஆதரவுக் குரல் தரவில்லை என்றாலும் முன்னாள்அமைச்சர்கள் பலர் இது தொடர்பாக செங்கோட்டையனிடம் இப்போது வரை தொடர்பில் இருக்கின்றனர்.

பிரிந்து சென்றவர்களை ஒன்று திரட்டும் பணியை செய்ய வேண்டும் என முன்னணி நிர்வாகிகள் கேஏஎஸ்ஸிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் விருப்பப்படி, மாவட்ட வாரியாக கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைக்க கேஏஎஸ் இனிமுயற்சி எடுப்பார். அந்த முயற்சிகள் கைகூடி வரும்போது இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவருடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.

தவெகவை கூட்டணிக்குள் இபிஎஸ் கொண்டு வந்து விடுவார். எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுக முன்னணி நிர்வாகிகள் தற்போது தவெக கூட்டணி இல்லை என்ற தகவல் வெளியானதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதில் பாஜக உறுதியாக இருக்குமானால், தவெகவுடன்கூட்டணி அமைக்க தேவையான ஏற்பாடுகளை ஓபிஎஸ், டிடிவி மற்றும் கேஏஎஸ் ஆகியோர் உறுதியாக எடுப்பார்கள். முதல்வர் பதவிக்கு போட்டியில்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர தயாராக உள்ள தவெக, தேர்தலை எதிர்கொள்ள இவர்களைப் போன்ற அனுபவசாலிகளை பயன்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்கும்.

இந்த கூட்டணி பேச்சுகள் நடக்கும்போது, தவெக இருந்தால் தங்களால் ஜெயிக்க முடியும் என்று கருதும் அதிமுக முன்னணியினர், இந்த அணிக்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவற்றோடு, “நீங்கள் எதிர்பாராத புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது” என்று டிடிவி சொன்னதற்கான பொருளும் இன்னும் பிடிபடவில்லை. இபிஎஸ் தான் தங்கள் எதிரி, தேர்தலில் அவரை வீழ்த்திவிட்டால், அதன்பின் அதிமுகவைக் கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில் இருக்கும் தினகரனும் ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனை எந்த எல்லைக்கும் இழுத்துச் செல்லலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT