‘‘காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், வேலை நிமித்தமாகச் சென்றுள்ள பிஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்; தவறாக நடத்தப்படுகின்றனர்'' என்று பிரதமர் மோடி பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு அவர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில், 'பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாள்வது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும்.
அதைவிடுத்து, தேர்தல் லாபத்துக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது. தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை பிரதமர் குறைத்துப் பேசி இருப்பது தமிழ் மக்களின் மனதை மட்டுமல்லாது இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையில், தமிழர்கள் மீதான அவதூறு கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.