தமிழகம்

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தலா? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; தலைவர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பிஹார் மக்​களை துன்​புறுத்​து​வ​தாக பிரதமர் நரேந்​திர மோடி பேசி​யதற்கு கண்​டனம் தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், அற்ப அரசி​யலை நிறுத்​தி​விட்டு நாட்​டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்​டும் என தெரி​வித்​துள்​ளனர்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்பூர் நகரில் கடந்த 30-ம் தேதி பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில்காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிஹார் தேர்தலையொட்டி இரு ஊழல்இளவரசர்கள் கைகோத்து உள்ளனர். ஒருவர் (ராகுல்காந்தி) நாட்டின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர். மற்றொருவர் (தேஜஸ்வி யாதவ்) பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர் என்று விமர்சனம் செய்தார்.

இந்த கூட்டத்தில், திமுகவையும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். ‘‘கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் பணியாற்றும் பிஹார் மக்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இதேபோல தமிழகத்தில் பணியாற்றும் பிஹார் தொழிலாளர்களை, திமுக தலைவர்கள் அவமதித்து பேசி வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு நடைபெறுகிறது’’ என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்த நாட்​டில் உள்ள அனை​வருக்​கு​மான பிரதமர் பொறுப்​பில் இருக்​கிறோம் என்​ப​தையேமோடி அடிக்​கடி மறந்​து, இது​போன்ற பேச்​சுகளால் தனது பொறுப்​புக்​குரிய மாண்பை இழந்​து​விடக் கூடாது என்று ஒரு தமிழ​னாக வேதனை​யுடன் கேட்​டுக்​கொள்​கிறேன்.

ஒடிசா - பிஹார் என எங்கு சென்​றாலும், பாஜக​வினர் தமிழர்​களின் மீதான வன்​மத்​தை தேர்​தல் அரசி​யலுக்​காக வெளிப்​படுத்​து​வதற்கு தமிழக மக்​களின் முதல்​வர் என்ற முறை​யில் கடுமை​யான கண்​டனத்தை தெரி​வித்​துக் கொள்​கிறேன். பன்​முகத்​தன்மை கொண்ட, வேற்​றுமை​யில் ஒற்​றுமை​யைக் காணும் பெரு​மைமிக்க இந்​தி​யா​வில், இந்​துக்​களுக்​கும் முஸ்​லிம்​களுக்​கும் இடையே பகையை வளர்ப்​பது, தமிழர்​களுக்​கும், பிஹார் மக்​களுக்​கும் இடையே பகை உண்​டாக்​கும்​படி நடந்​து​கொள்​வது போன்ற அற்ப அரசி​யல் செயல்​பாடு​களை நிறுத்​தி​விட்​டு,நாட்​டின் நலன் மீது பிரதமர் மோடியும், பாஜக​வினரும் கவனம் செலுத்த வேண்​டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:

திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி.: வடமாநிலத் தேர்​தல் வந்தால்,தமிழர்​களை எதிரியாகசித்​தரித்​து, வெறுப்​பு​வாத அரசி​யல் செய்​வது பாஜகவின் வாடிக்​கை. அடுத்த ஆண்டு தமிழகத்​துக்கு வரும்​போது, பிரதமர் இதே கருத்​தைச் சொல்​லட்​டும். அப்​போது வெளி​மாநிலத் தொழிலா​ளர்​களே தமிழகம் அவர்​களைக் காப்​பதை விளக்​கு​வார்​கள். தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களாக பிஹாரை சேர்ந்த ஒரு​வர் மட்​டுமே தனது அரசி​யலை செய்​ய​முடி​யாமல் துன்​பப்​பட்டு வரு​கிறார். அவரும் ராஜ்பவனில் வசிக்​கிறார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: தேர்​தலுக்​காக​வும், வாக்கு வங்​கிக்​காக​வும் பிரதமர் எதை வேண்​டு​மா​னாலும் அள்ளி வீசக்​கூ​டாது. எனது தொகு​தி​யில் மட்​டும் 1 லட்​சத்​துக்கு மேற்​பட்ட பிஹார் தொழிலா​ளர்​கள் மகிழ்ச்​சி​யாக வாழ்​கின்​றனர். பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். தான் பேசி​யதை அவர் திரும்​ப பெற வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: தேர்​தல் ஆதா​யத்​துக்​காக தமிழகத்​தின் மீதும், தமிழகமக்​கள் மீதும் வன்​மம் கக்​கு​வதை வழக்​க​மாகக் கொண்​டிருக்​கிறார் பிரதமர் மோடி. அவர் தனது ஆட்​சி​யின் திட்டங்களை, சாதனை​களை சொல்லிவாக்கு கேட்க முடி​யாத இயலாமை​யில் பகை உணர்வை தூண்​டி, அரசியல் ஆதாயம் தேடு​கிறார்.​

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தமிழகத்​தில் பணிபுரி​யும் பிஹார் தொழிலா​ளர்​கள் துன்​புறுத்​தப்​படு​வ​தாக பிரதமர் மோடி பச்​சைப் பொய்​யைப் பரப்​புரை செய்​வது தமிழர்​கள் மீதான வன்​மத்​தின் வெளிப்​பா​டாகும். வட மாநிலத்​தவர்​களின் வாக்​கு​களைப் பெறும் ஒரே நோக்கத்துக்காக, இந்தி பேசும் மக்​களிடம் இனவெறியைத் தூண்​டு​கி​றார். அற்ப அரசி​யல் லாபத்​துக்​காக பிரதமர் மோடி தமிழர்​கள் மீது வரலாற்று பெரும்​பழியைச் சுமத்​தி​யது வன்​மை​யாக கண்​டிக்கத்தக்கது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT