சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம்தான் பிஹார், உத்திரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடலிபுத்திரம் போய் இந்தியர்களாக ஒன்றிணைந்து நாட்டைக் காப்போம் என்கிறார் ஆனால், வெறுப்புப் பேச்சால் வளர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டின் பிரதமரான மோடியோ, ஐ.நா-வில் தமிழைப் பேசுகிறேன். உலகமெல்லாம் திருக்குறளை எடுத்துச் செல்கிறேன் என வெளி வேஷம் போட்டுவிட்டு, பிஹார் தேர்தல் களத்தில் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப் படுத்தி பேசியிருக்கிறார். இது வெறுப்பின் உச்சம் அல்லாமல் வேறென்ன.
பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம் தான் பிஹார், உத்திரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். தமிழகமும் அவர்களை தாய் வீடு போல அடைக்கலம் கொடுத்து வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் வெறுப்பின் மூலம் தேர்தல் களத்தில் வென்றிருக்கலாம். ஆனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தத்துவார்த்த அடிப்படையில் வாழும் தமிழர்கள் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது” என்று ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று பிஹாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவினர், பிஹாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.