தமிழகம்

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கி.கணேஷ்

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ”கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் இரா.கண்ணன், தான் கூடுதலாக கவனித்து வந்த மாநில மனித உரிமைகள் ஆணைய செயலர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். அவர் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அம்ரித், கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

மேலும், ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 அதிகாரிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா, ஆவின் இணை மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணை இயக்குநர் சி.முத்துக்குமரன், அதே முகமையின் இயக்குநராகவும், சிப்காட் பொது மேலாளர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, சென்னை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராக இருந்த மு.வீரப்பன், சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், திருநெல்வேலி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரேவதி, உயர்கல்வித் துறை துணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT