பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை!

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.1) உருவாகக் கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவ.3, 4 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், நவ.5, 6 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக மழை பொழிவு எங்கும் பதிவாகவில்லை.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் பதிவான மழை அளவுகளின்படி 23 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக மழை பொழிவு 17 செ.மீ இருக்கும். இந்த ஆண்டு அக்டோபரில் வழக்கத்தை விட 36 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையில் அக்டோபர் மாதத்தில் வழக்கமாக 27 செ.மீ மழை பெய்யும். இந்த ஆண்டு அக்டோபரில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT