தமிழகம்

அரசு மற்றும் திமுக வழக்கறிஞர்கள் இடையே காரசார வாதம்: கருணாநிதி உடலை அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்வதே உரிய மரியாதை - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

திராவிடப் பாரம்பரியத்தின் வழித் தோன்றலான மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள மானசீக அரசியல் குருவான அண்ணாவின் நினைவகம் அருகிலேயே கண்ணிய மாக நல்லடக்கம் செய்வதுதான் அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உணர்ச்சிகரமாக தீர்ப்பை அளித் தது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரை யில் அண்ணா நினைவிடப் பகுதியில் இடம் ஒதுக்கித்தர திமுக சார்பில் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் இதற்கு அனுமதி மறுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘முன்னாள் முதல் வர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரை பகுதியில் அடக்கம் செய்வதற்கு பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே அந்த இடத்தை ஒதுக்க இயலவில்லை. அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் காந்தி மண்டபம் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்க அரசு தயாராக உள்ளது’’ என தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “5 முறை முதல்வராகவும் 13 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. திராவிடப் பாரம்பரியத்தின் வழித்தோன்றலாய் சுய மரியாதைக்கு வித்திட்டவர். தமிழுக்காகவும் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட மூத்த தலைவர். வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த அவரது உடலை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் உள்ள பகுதியில் அடக்கம் செய்வதுதான் உரிய மரியாதையாக இருக்கும். எனவே இதுதொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

நள்ளிரவில் வழக்கு விசாரணை

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி ரமேஷிடம், திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டார்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று அதிகாலை 1 மணியளவில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷின் வீட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சக நீதிபதியான எஸ்.எஸ்.சுந்தரும் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தனர்.

திமுக தரப்பில் மூத்த வழக் கறிஞர்கள் பி.வில்சன், சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ, கண்ணதாசன், கிரிராஜன், வீரா கதிரவன் ஆகியோரும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக் கறிஞர்கள் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், ராஜகோபால், அரசு பிளீடர் டி.என்.ராஜ கோபால் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்குகள் வாபஸ்

மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவி்த்து ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்திருந்த வழக்கறிஞர் கள் எஸ்.துரைசாமி, கே.பாலு ஆகியோரும் இந்த விசா ரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். அதேபோல டிராஃபிக் ராமசாமி சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், ‘‘இது தொடர்பாக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தவர்களே தங்களது வழக்கை வாபஸ் பெறுகிறோம் எனக்கூறும் போது அண்ணா நினைவகம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு என்ன சட்ட சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சமாளித்துக் கொள்ள முடியும் என நீங்கள் உறுதியளித்தால் நாளை (நேற்று) காலை 8 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று காலை 8 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் அதே நீதிபதிகள் முன்னிலையில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நடந்த காரசார வாதம் வருமாறு:

பி.வில்சன் (திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர்): காமராஜர், ராஜாஜி இருவரும் காங்கிரஸ் வழியில் வந்தவர்கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பெரியார், அண்ணாவின் வழித் தோன்றல். திராவிடக் கொள்கை யில் பிடிப்புடன் இருந்தவர். ஏழரை கோடி கொண்ட தமிழகத்தில் பல கோடி தொண்டர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயல லலிதா ஆகிய 3 பேரது உடல்களும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளபோது திமுக தலைவர் கருணாநிதிக்கு மட்டும் அனுமதி தர மறுப்பது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல். அத்துடன் பாகுபாடு பார்ப்பது போல உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 21-ன் படி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலையும் மெரினா கடற்கரை பகுதியிலேயே கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து தகுதிகளும், உரிமைகளும் அவருக்கு உள்ளன.

அண்ணா நினைவிடம் உள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை பாதுகாப்பு மண்டலத்தில் வர வில்லை. அந்த பகுதியை மயானம் என கடந்த 1988-ம் ஆண்டே மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. எனவே பேரறிஞர் அண்ணாவை மானசீக குருவாக ஏற்று திராவிடப் பாரம்பரியத்தின் வழிவந்த கருணாநிதியின் உடலை யும் அண்ணா நினைவிடம் பகுதி யிலேயே அடக்கம் செய்ய உத்தர விட வேண்டும். மக்கள் அவர் மீது வைத்துள்ள உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

சி.எஸ்.வைத்தியநாதன் (தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்): மெரினா கடற் கரையில் அடக்கம் செய்யப்பட் டுள்ள மூவரும் முதல்வராக பதவி வகித்தபோது இறந்தவர் கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி முன்னாள் முதல்வர் மட்டுமே. ஏற்கெனவே ஜெயலலிதா வுக்கு நினைவகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்த வர்கள் இப்போது நள்ளிரவில் வீடு தேடி வந்து தங்களது வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர் என்றால் அதற்கு பின்புலம் என்ன. எந்த உரிமையில் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். வெறும் உணர்ச்சிகளுக்கும் இரக் கத்துக்கும் இடம் கொடுக்க முடியாது.

(அப்போது வழக்கறிஞர் துரைசாமி எழுந்து இவ்வாறு வழக்கு தொடர்ந்த எங்களை விமர்சிப்பது ஆட்சேபத்திற்குரியது என்றார். தொடர்ந்து நீதிமன்றத்தில் கூடியிருந்த திமுக வழக்கறிஞர்கள் கூட்டமும் சி.எஸ்.வைத்தியநாதனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆட்சேபம் தெரிவித்தது)

நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்: ஒரு மூத்த வழக்கறிஞர் வாதிடுகிறார். அவர் வாதத்தின் போது வழக்குக்கு தேவையான விசயங்களை குறிப்பிடும்போது இவ்வாறு தேவையின்றி இடையூறு செய்யக்கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்.

சி.எஸ்.வைத்தியநாதன்: ஒருவரது உடலை அடக்கம் செய்ய இடம் கோரும்போது அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது என்பதை மனுதாரர் ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. காந்தி மண்டபம் பகுதியில் கருணாநிதியை அடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறுவது காமராஜர், ராஜாஜி, பக்தவச்சலம் போன்றவர்களை அவமதிப்பதற்கு சமம். அப்படியென்றால் பெரியார் திராவிட வழிவந்தவர் இல்லையா. அவரது உடல் மெரினாவிலா அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மனு தாரர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கும், தற்போது இவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத் துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதல் வர்களான காமராஜர் மற்றும் ஜானகி ராமச்சந் திரனுக்கு என்ன நிலைப் பாட்டை திமுக அரசு எடுத்ததோ தற்போது அதை நிலைப்பாட்டைத்தான் தமிழக அரசும் எடுத்துள் ளது. ஜானகி இறந்தபோது எம்ஜிஆர் அருகே அடக்கம் செய்யக் கூடாது என கருணாநிதியே கைப்பட எழுதி பிறப்பித்த உத்தரவு நகல் எங்களிடம் உள்ளது.

நீதிபதிகள்: பெரியாரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் கேட்கவில்லை. அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் வேறு இடத்தில் அடக்கம் செய்துள்ளனர். கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்போது அதற்கு எதிராக இருந்த வழக்குகளும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிறகு என்ன சிக்கல் என்பதை அரசு தரப்பு விளக்க வேண்டும்.

சி.எஸ்.வைத்தியநாதன்: மெரினாவில் அடக்கம் செய்வதற் காக உள்ள புரோட்டோகாலில் முன்னாள் முதல்வர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதனால் தான் எதிர்க்கிறோம். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே நேரத்தில் வாபஸ் பெறப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

வீரா கதிரவன் ( திமுக மூத்த வழக்கறிஞர்): புரோட்டோகால் என்பது அரசு துக்கம் அனுசரிப்ப திலும் மரியாதை செலுத்து வதிலும்தான் உள்ளது. மெரினா வில் இடம் ஒதுக்க புரோட்டோகால் தேவையில்லை. எம்ஜிஆரை பின்பற்றும் ஜெயலலிதாவை மெரினாவில் அடக்கம் செய்திருக் கும்போது, அண்ணாவை பின்பற்றும் கருணாநிதியை அங்கு அடக்கம் செய்வதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது?.

பி.வில்சன்: முதல்வராக பதவியில் இருப்பவர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு எவ்வித விதிகளோ, சட்டமோ இல்லை. தற்போது இந்த அறிவிப்பின் மூலமாக திமுக தலைவருக்கு உள்ள நற்புகழுக்கும், பெயருக்கும் தமிழக அரசு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது. பழிவாங்கும் நோக்கு டன் தான் தற்போது தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சி.எஸ்.வைத்தியநாதன்: ஒரு வழக்கை நள்ளிரவில் முறையிட்டு, நள்ளிரவிலேயே பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அவசரம் அவசரமாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டிய அவசிய மில்லை. என் மீது வழக்கறிஞர் பி.வில்சன் தனிப்பட்ட தாக்குதல் தொடுக்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழக அரசு சார்பில் தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நீதிபதிகள்: அப்போ, இந்த வழக்கை இன்னும் ஒருவாரத்துக்கு ஒத்தி வைக்கலாமா?

பி.வில்சன்: உச்ச நீதிமன்றத்தி லும் கூட அவசர வழக்குளை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பளித் துள்ளனர். வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநானும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து தான் இங்கு வந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதற்கு இதுவரை அரசு தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

கணேசன் ( டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர்): எங்களது தரப்பு வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பான முடிவை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

இவ்வாறு காலை 10.30 மணி வரை வாதங்கள் நடந்தது.

அதன்பிறகு நீதிபதிகள், ‘‘மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசை யில் திராவிட இயக்கத்தின் முது பெரும் தலைவரும் திராவிடப் பாரம்பரியத்தின் வழித்தோன்ற லான கருணாநிதியின் உடலை அவரது மானசீக அரசியல் குருவான அண்ணாவின் நினைவகம் அருகே அடக்கம் செய்வது தான் அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும். மேலும் மெரினா கடற்கரையை ஒட்டி அண்ணா நினைவகம் அமைந்துள்ள பகுதி கடலோர ஒழங்குமுறை மண்டலத் துக்கு உட்பட்ட பகுதிக்குள் வரவில்லை எனவும் வாதிடப்பட்டுள் ளது. எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் தற்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை.

எனவே திமுக தலைவர் கருணா நிதியின் உடலை மெரினா கடற் கரையில் அண்ணா நினைவகம் பகுதியில் கண்ணியமான முறை யில் நல்லடக்கம் செய்வதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து ஏற் பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சனை, வழக் கறிஞர் நீலகண்டன் கண்ணீருடன் கட்டியணைத்து வாழ்த்தினார். சக திமுக வழக்கறிஞர்களும் பி.வில்சனை வாழ்த்தினர். இந்த வழக்கு விவரங்களை வடஇந்திய சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்தன.

SCROLL FOR NEXT